மாவட்டங்களில், அந்தந்த வட்டார கல்வி அதிகாரிகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், மாதந்தோறும் திடீர் ஆய்வுகள் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளின் தரம், உள்கட்டமைப்பு வசதியை கண்டறிய, ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலர்களும், பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். மாதம் குறைந்தபட்சம், 20 பள்ளிகளில் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.ஆய்வு நடத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது.பள்ளிகள் இயங்கும் முறை, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், பள்ளி செயல்பாடு, வருகைப் பதிவேடு, நலத் திட்ட செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.மேலும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், கணினி பயன்பாடு, உடற்கல்வி குறித்து மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆய்வின்போது, திரட்டப்பட்ட தகவல்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''ஏற்கனவே இது நடைமுறையில் உள்ள உத்தரவுதான். பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள, 78 அரசு பள்ளிகளில் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இது மேலும், தீவிரப்படுத்தப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment