கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்கள் என்ற நிலையும், எண்ணமும் ஒருகால கட்டத்தில் மக்கள் மனதில் இருந்து வந்தது. அந்த மனநிலை தற்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மாறி வருகிறது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான நீட் தேர்வு கட்டாயம் மற்றும் வேலை வாய்ப்பு குறைவு காரணமாக பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களின் மோகம் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களின் கவனம் தற்போது கலை அறிவியல் படிப்புகள் மீது திரும்பியுள்ளது.
கலை அறிவியல் படிப்புகளை மற்ற படிப்புகளுடன் ஒப்பிடும் போது சேர்க்கை மிக எளிது, கல்வி கட்டணம் குறைவு, மூன்றாண்டுகளில் இளநிலை படிப்பை முடித்து விடலாம். படிக்கும் போதே பகுதி நேர வேலைவாய்ப்பு, மாற்று திறன்களை வளர்த்து கொள்ள போதிய நேரம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் அதிகளவில் பங்கேற்கலாம். உடனடி வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் தற்போது மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பொறியியல் மற்றும் மருத்துவம் படித்தவர்களுக்கு அந்தந்த துறைகளில் மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால், கலை அறிவியல் கல்லூரிகளில் குறைந்த செலவில் படித்து முடித்ததும் மாணவர்களுக்கு பல்வேறு துறையில் வேலை வாய்ப்பு உள்ளதால் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக, கலை மற்றும் அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை ஆங்கில இலக்கியம், பிகாம், கணிதம், வணிகவியல், பிபிஏ, பிசிஏ, புவியியல், உணவு அறிவியல், ஓட்டல் மேலாண்மை, பேஷன் டிசைனிங், சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது.
இருப்பினும், கலை அறிவியலை பொறுத்தவரையில் அந்தந்த கல்லூரிகள் தனித்தனியாக அவர்களுக்கான இடங்களை நிரப்பி கொள்வதற்கான கலந்தாய்வுகள் நடத்துகின்றன. ஒருசில கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தும் முறை கூட இல்லாமல் மாணவர்களை நேரடியாக சேர்க்கும் சூழல் நிலவுகிறது. முக்கியமாக கலை, அறிவியல் படிப்புகளை பொறுத்தவரையில் ஒவ்வாரு கல்லூரிக்கும் மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. மாணவர்கள் இரண்டு கல்லூரிக்கோ அல்லது ஒரு கல்லூரிக்கோ விண்ணப்பித்தால் எந்த கல்லூரியிலும் அவர்களுக்கு இடம் கிடைக்காத சூழல் நிலவுகிறது.
இதனால், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்துவதைப்போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்த யுஜிசிக்கு அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளையும் மனித மனித வளத்துறை ஆய்வுசெய்து வருவதாகவும், இதை விரிவாக வல்லுநர்களிடம் கலந்தாய்வு செய்து அறிவிப்புகளை விரைவில் மத்திய அரசு வெளியிடும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment