Tamilnadu Teachers & Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

May 15, 2020

Science Fact - நமக்கு ஏன் வயதாகிறது? விடை சொல்கிறது புதிய ஆய்வு!



'இந்த உலகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும்' என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும்.

அதாவது, ஒரு குழந்தை பிறந்த பின்பு நாட்கள், வருடங்கள் செல்ல செல்ல அதற்கு வயதாகிறது. வயதாக வயதாக உடல் மெலிந்து, நோய்கள் ஏற்பட்டு இறுதியில் இறந்து போகிறது. ஆக, பிறந்த ஒவ்வொருவரும் இறந்து போவதற்கு காரணம் நமக்கு வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான்!

ஆமாம், நமக்கு ஏன் வயதாகிறது?

இந்த கேள்விக்கு உலக அறிவியலாளர்கள் யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் நான் கண்டுபிடித்துவிட்டேன் என்கிறார் அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்டின் ஹெட்சர்.

நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புரதங்கள் இருக்கிறது. 'ELLP' என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள். நியூக்ளியசிற்கு உள்ளேயும், நியூக்ளியசிலிருந்து வெளியேவும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த ELLP புரதங்கள்தான். இதனால் இவற்றுக்கு 'போக்குவரத்து வழித்தட புரதங்கள்' என்று மற்றொரு பெயரும் உண்டு.

முக்கியமாக, நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த ELLP புரதங்களே! உடலின் பிற புரதங்கள் சேதமடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும். ஆனால், வேதியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதமடையும் போது அவற்றுக்கு மாற்றாக, புதிய ELLP புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, பல நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப்பொருளான DNA-வை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்படைகின்றன என்று கண்டறிந்துள்ளனர் மார்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.

பொதுவாக, உடலிலுள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயலிழந்து போகும். ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம். உதாரணமாக, எலிகளின் உடலிலுள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்டின் ஹெட்சர்.

இத்தகைய விசேஷ பண்புடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.

மூப்படைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்படைதலுக்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்படைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப்பொருட்கள் சென்று உள்ளிருக்கும் DNA-வை சேதப்படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றமடைகின்றன என்று ஆய்வாளர் மார்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்படைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி. இந்த பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதிநிலை (internal stability) பாதிக்கப்படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

ஆய்வாளர் மார்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில், (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதமடைவதே காரணமாக இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்ட்டுள்ளது.

நியூரான்கள் தவிர்த்த உடலிலுள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும்போது அவை, அவற்றின் சேதமடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்துவிடுகின்றன. இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்துவிடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒரு முறை சேதமடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது துரதிஷ்டவசமானது.

மூப்படைதல் தொடர்பான இந்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு நரம்புச்சிதைவு குறைபாடுகளான அல்ஷெய்மர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் ஏற்படுவதற்கான மூலக்காரணங்களை அறிந்துகொள்ளவும், இந்த நோய்கள் குறித்த மேலதிக புரிதலையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

'என்றும் பதினாறு' மார்கண்டேயனைப் பற்றி படித்திருக்கிறோம். இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கும்போது, ஒருவேளை மார்கண்டேயரின் ELLP புரதங்கள் அவருடைய பதினாறாவது வயதுக்குப் பிறகு சேதமடையவே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது!

கட்டுரையாளர்,
ஹரிநாராயணன்.

No comments:

Post a Comment